விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை பகுதியில் ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிற்பகல் நேரத்தில் ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்ததோடு மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆலையில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் ஏற்கனவே பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் பல தொழிலாளர்களை காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் விபத்து நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், சனிக்கிழமை (18.02.24) மதியம் 12:30 மணியளவில் விபத்து நடந்ததாக தெரிவித்தார். ஆலை முறையாக உரிமம் பெற்று நடைபெற்று வந்ததாகவும், ஆனால் விதியை மீறி ஒரே அறையில் 8 பேர் வேலை பார்த்தாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் நேர்ந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என்று தெரிய வந்துள்ளதாகவும், மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க போலீஸ், தீயணைப்பு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்,” எனவும் ஆட்சியர் ஜெயசீலன் கூறினார்.
இழப்பீடு அறிவிப்பு
இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதோடு, தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விபத்து குறித்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்ததாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‘இந்த இக்கட்டான சமயத்தில், என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களுடைய அன்புக்குரியவர்களுடன் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்,’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply