குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ள சூழலில், இந்த சிஏஏ (CAA- citizenship amendment act) என்றாலென்ன? மற்றும் அதன் விதிகள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.முன்பு சர்ச்சைக்குள்ளான இந்த குடியுரிமை திருத்த சட்டம் நமது நாட்டில் தற்போது அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் சில வாரங்களிலே மக்களவைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சட்டம்:
இச்சட்டத்தின்படி வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 31-12-2014ஆம் தேதி மற்றும் அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜெயின்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி மக்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இச் சட்டமாகும். அந்த குறிப்பிட்ட நாடுகளில் மத சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
விதிகள்:
இச்சட்டம் மூலமாக மத ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக அந்த நாட்டு மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் 5+1 என 6 ஆண்டுகள் இந்தியாவிலே இருந்திருக்க வேண்டும். அதாவது கடந்த ஒரு ஆண்டு தொடர்ச்சியாகவும், அதுபோல கடந்த 14 ஆண்டுகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இதற்கு முன்பாக புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து 11 ஆண்டுகள் இங்கு இருந்தால் மட்டுமே இந்திய குடியுரிமையை பெறமுடியும் என்ற விதி இருந்தது. அதனை இந்த புதிய சட்டத்தில் குறைத்துள்ளனர். விதிவிலக்குகள்: அதேநேரத்தில் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங், மேகாலயா மாநிலத்தின் கரோ மலைகள், மிசோரம்மில் உள்ள சக்மா மாவட்டம், திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உள்பட, இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் உள்ள அசாம், திரிபுரா, மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளிலிருந்து இச்சட்டம் விலக்களிக்கிறது.
போராட்டங்கள்:
2019ம் ஆண்டு டிசம்பரில் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதோடு, இச்சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தது. இப்போராட்டங்கள் பல வாரங்கள் வரை நீட்டித்து இறுதியில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு விதிக்கப்பட்ட சமயத்தில் தான் முடிவுக்கு வந்தது.பின்னர் இவ்வளவு காலம் மத்திய அரசானது இச்சட்டம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக, மீண்டும் இந்த சட்டம் குறித்த பேச்சுக்கள் இருந்தது வந்தது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிப் பல மூத்த பாஜக தலைவர்களும், மக்களவைத் தேர்தலுக்குள் இச் சட்ட விதிகளானது அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்று கூறி வந்தனர். இச்சூழலில் தான் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
தெரிவிக்கப்பட்ட காரணம்:
அச்சம் காரணமாக மற்றசில நாடுகளிலிருந்து இங்கு வருவோருக்குக் இந்தியக் குடியுரிமை வழங்குவதாக இருந்தால் அனைவருக்குமே வழங்கலாம் எனும்போது அதில் இஸ்லாமியர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருந்தபோதும், இச்சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வருவோர்க்கு மட்டுமே பொருந்தும், என்றும் அங்கெல்லாம் இசுலாமியர்கள் தான் பெரும்பான்மை மக்களாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply