தன் எதிர்காலத்தை முன்பே அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். அதற்காகவே இத்தனை வகையான சோதிட சாத்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் பொதுமக்களுக்கு அவற்றை அணுகுவதற்கு சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டியதும், சோதிடர்கள் அவற்றை பாமரர்களும் புரியும் வகையில் விளக்க வேண்டியதும் அவசியமாகிறது.
ராசிபலன்:
இன்றைய நாளில் தினபலன், வாரபலன், மாதாந்திர, வருடாந்திர ராசிபலன்களை தவறாமல் பார்த்து அதன்படி நமக்கு பலன்கள் நடக்கவில்லையே என்று வருந்துவோர் பலர். அத்தகைய கேள்வி கொண்டோர் தெளிவுறும் வண்ணம் இந்த பதிவு அமையும்.
சோதிடம் என்பது நேரம், இடம், கோள்களின் சஞ்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் கணிப்பு முறையாகும். இதில் பொதுவாக பிறந்த நேரத்தில் இருந்த கோள்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஜாதக அடிப்படையில் வாழ்நாளின் பலன் சொல்லப்படுவது ஒரு முறை.
இன்றைய நாளில், அல்லது மாதத்தில், அல்லது வருடத்தில் இருக்கும் கோள் அமைவுகள், பெயர்ச்சிகளின் அடிப்படையில் பலன் சொல்லப்படுவது ஒரு வகை.
பொதுவாக மேசம் தொடங்கி மீனம் முடிய மொத்த ராசிகள் 12 ஆகும்.
மாதாந்திர ராசிபலன் என்பதை எடுத்துக்காட்டாக கொண்டால், அந்த ஒரு மாதத்தில் வான வெளியில் சஞ்சரிக்கும் கோள்கள் பூமியில், தனிப்பட்ட மனித வாழ்வில் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணிப்பதாகும். அது நம் ராசியில் பிறந்த அனைவருக்கும் பொதுவான பதிவாக அமையும். நமக்கு மட்டுமே துல்லியமாக பொருந்தாது.
புரியும்படி சொல்லவேண்டும் என்றால் உலக மக்கள்தொகையில் 12ல் ஒரு பங்கு மக்கள் நம் ராசியில் பிறந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவருக்கும் அது ஏதாவது வகையில் தொடர்புபடும் வகையிலே சோதிடர்கள் வார்த்தைகளை கோர்த்து விளக்கி சொல்வர். மேம்போக்கான ஏற்ற இறக்கங்களை, அதற்கேற்ப முடிவுகளை நாம் இதன் அடிப்படையில் தீர்மானிக்கலாம். இதுவே கோள் + சாரம் = கோச்சாரம் என வழங்கப்படுகிறது. இது சந்திரன் நின்ற ராசியை அடிப்படையாகக் கொண்டு அமையும்.
ஏழரைச் சனி, அட்டமச் சனி, பத்தில் குரு போன்ற கிரக அமைவுகள் இந்த வகையில் அமைவதாகும்.
தனி நபராக நமது வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்காகவே பிறவி ஜாதக கணிப்பு முறை உள்ளது, இது லக்னத்தில் அடிப்படையில் கணிக்கப்படும். நாம் பிறந்த இடத்தில் அந்த நேரத்தில் வான வெளியில் தென்படும் கோள்களின் அமைவை அடிப்படையாக கொண்டு எழுதப்படும், அது தொடங்கி தசை, புத்தி, அந்தரம் என்று வாழ்நாள் முழுதுமாக பலன்கள் சொல்லப்படும். இதனை கொண்டு இந்த வயதில் இந்த பலன் என்று சொல்லலாம். தர்மகர்மாதிபதி யோகம் தொடங்கி நூற்றுக்கணக்கான யோகங்கள் மற்றும் செவ்வாய் தோஷம், ராகு கேது, காலசர்ப்ப தோஷங்கள் இதில் வருபவை.
இதே யோகம் தோஷம் போன்றவை கோட்சாரத்தில் வரும் என்றாலும் அவை தற்காலிகமானவையே.
இந்த கருத்தை மனதில் கொண்டு ராசிபலன் பார்த்தாலும் ஜாதகம் பார்த்தாலும் நீங்கள் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
Leave a Reply