For Support

சோழர் காலத்து சமூகநீதி!

சோழர் காலத்து சமூகநீதி

(சோழர்கள் – இராஜேந்திரன் – கல்வெட்டு – பிராமணர்கள் – வேளாளர்கள் – தமிழ் – சமஸ்கிருதம் – க்ரந்தம்)

பெரியானை அடித்தே கொன்றானா? சங்கரத் தடியான்?

ஒரு நண்பருடனான சமூக நீதி காத்த #பெரியார் என்று துவங்கிய விவாதத்தில் சோழர்கள் காலத்தில் சமஸ்கிருதமே இல்லை என்றும், பார்ப்பான் வேறு பிராமணன் வேறு என்று முற்றுபெற்றது அந்த விவாதம். பொதுவாக இன்றையை அரசியல் சூழலில் சமூக நீதி என்ற பெயரில் நடக்கும் கூத்துகளை கண்டால் சமூகநீதி என்றால் என்ன என்பதே மறந்துவிடும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால் இன்றிலிருந்து சுமார் 965 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் ராஜேந்திரச் சோழன் காலத்தில் வேளாளர் மற்றும் பிராமணர்கள் அடங்கிய சித்திரமேழிப் பெருக்காளர்கள் கூடியிருந்த கூட்டத்திற்கு நீதி கேட்டு ஒரு வழக்கு வருகிறது.

இன்று நம்மால் ஆங்காங்கே அண்ணன் தம்பியர்களுக்கிடேயே ஏற்படும் சண்டை சச்சரவுகளுடன் வெட்டு குத்துகளையும் அதனால் வரும் வழக்குகளையும் காண முடிகிறது. அதுபோல் 965 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சண்டையையும், அச்சண்டையின் முடிவில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிராமணர் அடங்கிய சபை என்ன தீர்ப்பு கொடுக்கிறது? இதனால் சமூகநீதி எப்படி காக்கப்பட்டது என்பதே பதிவின் உட்கரு. தொடர்ந்து படியுங்கள் ..!

தருப்பேறுடையான் தாழிக்கோனன் என்பவருக்கு சங்கரத்தடியான், பெரியான் என்ற பெயருடைய இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒருசமயம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி அது அடிதடியாக மாறியது. அண்ணன் தம்பியை அடிக்க தம்பி அண்ணனை அடிக்க சண்டை விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை அடிக்க அண்ணன் மயக்கமுற்று விழுகிறான்…!

இதைக்கண்ட தந்தை சம்பவ இடத்திற்கு வந்து அழுது புலம்புகிறார். காரணம் தம்பி அடித்ததில் அண்ணன் இறந்துவிட்டான். இந்த சம்பவத்தை நீதி கேட்பதற்காக சித்திரமேழி பெருக்காளர்கள் (வேளாளர்கள் மற்றும் பிராமணர்கள்) சபைக்கு இச்சம்பவத்தை தீர்ப்பு வேண்டி எடுத்துச்சென்றார். இதை விசாரித்த சபையர்கள் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்கள்….!

தீர்ப்பு என்னவாக இருக்கும்???

நிற்க 

அன்றைய காலத்தில் ஒருவரை கொலை செய்தால் மரண தண்டனையே தீர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வழக்கை விசாரித்த சபை அந்த ஏழை வேளாளர் நிலங்கள் எதுவும் இல்லாமல் அந்தஸ்தற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்ததை கண்டுபிடித்தனர். அந்த ஏழை விவசாயிக்கு அந்த இரு மகன்களே பெரும் சொத்து எனவும் இச்சம்பவம் தற்செயலாக நடந்தது என்பதையும், ஏற்கனவே ஒரு மகனை இழந்து தவிக்கும் அந்த ஏழை விவசாயிக்கு இன்னொரு மகனை விட்டால் சொத்துக்கள் எதுவும் இல்லை என்பதாலும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது அந்த குழு…..!

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஒரு நியாயமான தீர்ப்பை அளித்துள்ளனர் அந்த சித்திரமேழி சபையர். அதாவது வயது முதிர்த அந்த விவசாயின் மகன் செய்த கொலைக்குற்றத்துக்கு மரணதண்டனையை கொடுத்தால் அக் குடும்பமே(குடி) அழித்ததுபோகும் என்று சித்திரமேழிப் பெரியநாட்டார்கள் கருதியிருக்கின்றார்கள்.

ஏன்னென்றால் அச்சண்டை தற்செயலாக நடந்த ஒன்று என்றும் குற்றம் புரிந்த மகனுக்கு மரணதண்டனை கொடுத்தால் வயதான பெற்றோர்களை காக்க யாரும் இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் அக்குடும்பத்திற்கு சொத்துக்கள் இல்லை என்றும் கருதி தாமரைப்பாக்கத்து கோயில் ஒன்றிற்கு விளக்கு எரிக்கும்படி தண்டனை கொடுத்தார்கள்…!

இதற்கு பெயரல்லவா சமூகநீதி? சோழ சாம்ராஜ்யம் இன்றும் நம் மனதில் நிற்க இதுபோன்ற ஆட்சி முறைகளே காரணமாகும்.

இந்த தீர்ப்பை பட்டாங்கு ஓலை என்ற பெயரில் தச்ஊர் பிராமணன் திருவழுதி நாடன் என்பவரால் ஆவணமாக எழுதப்பட்ட செய்தியும், அதில் வேளாளர்களில் பதின்மர் (அறிவேன் என்று ) சாட்சி கையொப்பமிட்ட செய்தியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைப்பாக்கம் எனும் ஊரில் உள்ள அக்னீசுவரர் கோயிலில் இரண்டாம் ராஜேந்திரச் சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று இத்தகவலை தருகிறது….!

இனி கல்வெட்டுச்செய்தி.

மாவட்டம் : திருவண்ணாமலை.
வட்டம். : செங்கம்.
ஊர். : தாமரைப்பாக்கம்.
மொழி. : தமிழ் , சமஸ்கிருதம்.
எழுத்து : தமிழ், க்ரந்தம்.
அரசு. : சோழ அரசு
மன்னன். : இரண்டாம் ராஜேந்திரச் சோழன்
ஆட்சியாண்டு : ஐந்தாம் ஆட்சியாண்டு.
காலம் : பொ.ஆ 1057
கல்வெட்டு எண் : 183/1973-74.

கல்வெட்டுச் செய்தி : ஸ்வஸ்திஸ்ரீ என்று ஆரம்பித்து இரண்டாம் ராஜேந்திரச் சோழனின் புகழைக்கூறி ஆரம்பிக்கும் இக்கல்வெட்டின் உட்கருவின் விளக்கமாக,

“தம்பியடி பிச்ச அடியிலே தமையன் பட்டன் என்று வந்து சொல்ல உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோவென்று கேட்க மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயு நானுமே யுள்ளோமென்று சொன்னான் சொல்ல அர்த்தந் தானுண்டோவென்று கேட்க அர்த்தமுமில்லை என்றானென்ன ஒரு குடிக்கேடானைமயிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமையிலுந் திருத் தாமரைப்பாக்கத்துத் திருவக்நிஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தா விளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக”

இக்கல்வெட்டில் வரும் பிராமணரின் பெயர்: தச்ஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திரு வழுதி நாடனேன்.

இக்கல்வெட்டு எழுதப்பட்ட மொழி : தமிழும் சமஸ்கிருதமும்(க்ரந்த எழுத்து)

இறுதியாக மேற்கூறிய தகவலின் சான்றாக கல்வெட்டுப்பகுதியை படமாக இணைக்கிறேன். மேலும் இந்த கல்வெட்டை படித்த போது சேர சோழ பாண்டியர்களின் ஆட்சிமுறையைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது என்பது மறக்க முடியாத உண்மை. அவ்வகையில் இந்த கல்வெட்டை நான் கேட்டதும் சிரமம் பாராமல் எடுத்து தந்த தொல்லியல் ஆய்வாளர் திரு மா.மாரிராஜன் அவர்களுக்கு நன்றி ….!

இந்துவன்

Share this

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

You May Also Like

Recommended for you