மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் பெறப்பட்டு அதில் நிரந்தரமாக குடியிருக்காத மற்றும் உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை திரும்பப் பெற்று அவற்றை வீடுகள் இல்லாதவர்களுக்கு மாற்றி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் நேற்று (06.02.2024) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
வீடமைப்பு அதிகார சபை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைகள் வாயிலாக காணிகள் வழங்கப்பட்டு வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
முறையற்ற பயன்பாடு
இத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல வீடுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் அந்த வீடுகளை ஓய்வு விடுதிகளாக பயன்படுத்தி வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் எத்தனையோ குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வீட்டு வசதி கேட்டு அலைந்து திரிகின்றார்கள்.
சமூக சீர்கேடுகள்
இந்நிலையில், கிராம சேவகரின் உதவியுடன் குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளுக்கு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு பின்னர் பதினைந்து நாட்களுக்குள் உரிமையாளர் வராத வீடுகளை கையகப்படுத்தி வீடுகள் இல்லாத மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று காமாட்சி கிராமம், மங்களகம் போன்ற இடங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளில் நிறைய வீடுகள் குடியிருப்பாளர்கள் இல்லாததால் பாழடைந்து போய்க் காணப்படுவதாக கிராம சேவையாளர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயத்தில், அதுபோன்ற மக்கள் வசிக்காத வீடுகளில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக சமூக சீரழிவுகள் உருவாவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply