தமிழ் இலக்கியங்களில் இராமர் பாலம் :
அன்னை சீதையை மீட்க இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார். கம்பர் யாரெனில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செந்தமிழ் புலவன் ஆவார். இவர் வடமொழியில் இருந்த இராமாயணத்தை தமிழில் 12 ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்த்தவர். இதில் முக்கியமாக இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே மண்டோதரி கீழ்க்கண்டவாறு கூறுவதாக கம்பர் விளக்குவார்.!
“என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது”
- கம்பராமாயணம்.
இந்த கம்பராமாயண வரிகள் மூலம் இராமர் பாலம் கட்டியது பற்றிய தகவல்களை கம்பர் எப்படி எடுத்தாழ்கிறார் என்பதை அறியலாம். அதோடு மகாகவி பாரதியார் “சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்றுதான் கூறியுள்ளார். இங்கு கம்பர் மற்றும் பாரதியாரின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாகவே வரலாற்று நெடுக கம்பனுக்கும் முன்பே இராமர் பாலம் இருந்தது பற்றிய நம்பிக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன. இராஜேந்திரச் சோழனின் திருவாலங்காடு செப்பேடுகளில் இராம சேது பாலம் இருந்தது தொடர்பான நம்பிக்கைகள் பரவலாக இருந்ததை அறிய முடிகிறது. அதாவது இராஜேந்திரச் சோழன் ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில் அவனுடைய தந்தையான இராஜராஜ சோழனின் வெற்றிகளைப் பற்றி குறிப்பிடும்போது இலங்கையை வெற்றிகொண்டதாக கூறப்படும் பகுதியில் இந்த குறிப்பு உள்ளது. அதாவது,
“ராகவர்களின் நாயகன் (இராமன்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (இராஜராஜ சோழன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்”
- திருவாலங்காட்டு செப்பேடு.
இது இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இராஜராஜ சோழனின் புகழ் இராமாயணத்தோடு தொடர்பு படுத்தப் பட்டுள்ளது. மேலும் தேவாரத்தில் திருநாவுக்கரச பெருமானின் திருவலம்புர திருப்பதிகத்தில்,
“செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே”
- திருநாவுக்கரசர்.
திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கையைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவண னுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான். அப்பெருமானார், இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய், மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார்.!
“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்”
- மணிமேகலை.
திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது,குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம்,வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன் என்ற வரிகளால் குரங்குகளின் உதவியால் இராமர் பாலம் கட்டப்பட்ட செய்தியை மணிமேகலையும் பதிவு செய்கிறது.
– பா இந்துவன்.