‘இது என் பெற்றோருக்குத் தெரியப்போவதில்லை…’- அமன் செஹ்ராவத்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024:
அமன் செஹ்ராவத்தின் வெண்கலப் பதக்க வெற்றி, இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஐந்தில் இருந்து ஆறாக உயர்த்தியது.
ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் வெண்கலப் பதக்கத்திற்கான பிளேஆஃப் போட்டியில் அமன் செஹ்ராவத் வெள்ளியன்று வெண்கலம் வென்றதன் மூலம் வரலாறு படைத்தார். இதன் மூலம், 2024 ஆம் ஆண்டு பாரிஸில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற முதல் மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வரலாற்றில் குறைந்த வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கே.டி ஜாதவ், சுஷில் குமார், யோகேஷ்வர் தத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா ஆகியோரைக் கொண்ட புகழ்பெற்ற பட்டியலில் இடம்பிடித்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஏழாவது இந்திய மல்யுத்த வீரர் ஆனார்.
செஹ்ராவத் தனது வெற்றியால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஐந்தில் இருந்து ஆறாக உயர்த்தினார். முன்னதாக, மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் கலப்பு குழு போட்டியில் ஒன்று, மற்றொன்று தனிநபர் பிரிவில் என இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்,
இதற்கிடையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கமும், நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
செஹ்ராவத் ஜூலை 16, 2003 இல் பிறந்தார், தற்போது அவருக்கு 21 வயதாகிறது. இவர் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பீரோஹரை சேர்ந்தவர். அவர் ஆரம்பத்தில் மண் மல்யுத்தத்துடன் (mud wrestling) தனது விளையாட்டு பயணத்தை தொடங்கினார்.
2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பிரபல வீரர் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஈர்க்கப்பட்டு, இவர் தனது 10வது வயதில் புதுதில்லியில் உள்ள சத்ரசல் விளையாட்டு அரங்கில் சேர்ந்தார்.
அவருக்கு 11 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் இருவரும் வெவ்வேறு மருத்துவப் காரணங்களால் உயிரிழந்தனர். 2021 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார், மேலும் அவர் லலித் குமாரின் கீழ் பயிற்சி பெற்றார். 2022 ஆம் ஆண்டில், அவர் U-23 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு பெற்றார். பின்னர் அவர் 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார். அவர் ஜனவரி 2024 இல், ஜாக்ரெப் ஓபனின்(Zagreb Open) ஆடவர் 57 கிலோ பிரிவில் சிறப்பாக விளையாடி தங்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக் 2024க்காக அவர் இஸ்தான்புல்லில் நடந்த 2024 உலக மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்று, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஒதுக்கீட்டு இடத்தைப் பெற்றார்.
பின்னர் இந்திய மல்யுத்த சம்மேளனம்(Wrestling Federation of India – WFI) டோக்கியோ 2020 வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியாவை விட இவரைத் தேர்ந்தெடுத்தது. பாரீஸ் 2024க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஆண் மல்யுத்த வீரரும் இவரே ஆவார்.
இவர் தனது பாரிஸ் 2024 போட்டியில், மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவ் மற்றும் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகரோவ் ஆகியோருக்கு எதிராக வெற்றிகளுடன் தொடங்கினார், ஆனால் அரையிறுதியில் முதல் நிலை வீரரான ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியுற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான பிளேஆஃப் போட்டியில் அவர் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் க்ரூஸை வீழ்த்தினார். இந்த வெண்கல வெற்றிக்குப் பிறகு பேசிய செஹ்ராவத், தனது வெற்றியை தம் பெற்றோருக்கு அர்ப்பணித்தார். “இந்தப் பதக்கம் அவர்களுக்கானது, நான் ஒரு மல்யுத்த வீரன் ஆனேன், ஒலிம்பிக் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை” என்றும் செஹ்ராவத் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்