உடல் எடையைக் குறைக்க 10 குறிப்புகள்! (10 Tips for weight loss)

10 tips for weight loss

சிறு வயதிலிருந்தே படிப்பு வேலை குடும்பம் என்று பல்வேறு காரணங்களால் மக்களின் வாழ்வியல் மிகவும் பரபரப்பாகவும் அவசர கதியில் செல்லக் கூடியதாகவும் மாறிவிட்டது. இந்த ஓட்டத்தில் மனிதர்கள் உடல்நலத்தைப்பற்றி நினைக்கக்கூட நேரம் இன்றி அதிகமான பொறுப்புகளை சுமக்கின்றனர். அதன் காரணமாக வயது வேறுபாடின்றி நோய்களும் பெருகியுள்ளது. சென்ற நூற்றாண்டில் முதியோர்களுக்கு ஏற்பட்ட பல நோய்கள் இப்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

உடல்நலம் பேணுதல் என்பது நோய் ஏற்பட்டால் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதல்ல, அது அன்றாட வாழ்வின் செயல்பாடுகளாக நம் உடலின் செயல்பாடுகளில் குறை ஏற்படாமல் சீராக நலம் பேணுவதாகும்.

10 tips for weight loss

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பாதிப்பான உடல் பருமன் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

உடல் பருமன் பெரிய நோய் இல்லை, ஆனால் அதுதான் அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய்கள், கொழுப்பு, வாத நோய்கள், இரத்த நாளங்களில் அடைப்பு என்று இதனால் ஏற்படும் இணை நோய்கள் ஏராளம். “முதல் கோணல், முற்றிலும் கோணல்” என்பதுபோல இதன் விளைவுகள் அதிகம்.

பெரும்பாலும் வேலைப்பளு காரணமாக அவசரமாக உண்ணுதல் மற்றும் உண்ணும் உணவின் அளவிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் அமர்ந்து வேலை செய்யும் பலரும், நிறைய மாணவர்களும் இதனால் பாதிக்கப்படுவதை காண முடிகிறது.

உடல் பருமன் உள்ளோரும், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க விரும்புவோரும் எளிமையாக பின்பற்றி பயனடையும் வகையில் பத்து உதவிக் குறிப்புகளை இங்கே காணலாம். இதனை குறித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து சில மாதங்கள் இவற்றை பின்பற்றினாலே மாற்றத்தை நீங்கள் உணரலாம். வேறு நோய்களாலும், மரபியல் ரீதியாகவும் உடல் பருமன் ஏற்பட்டிருந்தால் தக்க மருத்துவ ஆலோசனைகளுடன் இவற்றை பின்பற்றவும்.

உடல் எடை குறைக்க உதவும் 10 முக்கியமான குறிப்புகள்:(10 tips for weight loss)

1. காலை உணவை தவிராதீர்கள்:

காலை உணவுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. வெளியே கிளம்பும் அவசரத்தில் அதை தொடர்ந்து தவிர்த்து வந்தால் பிறகு பசி அதிகரித்து அடுத்தடுத்த வேளைகளில் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

2. அதிகம் நீர் குடிக்கவும்:

நீர் குடிப்பது உடலின் இரசாயன செயல்பாடுகளுக்கு அடிப்படை தேவையாகும். வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையற்ற பொருள்களைக் கழிக்கவும் நீர் அவசியம். குடிக்கும் நீரின் அளவு என்பது வெயில் குளிர் போன்ற பருவகாலங்களை பொறுத்தும், நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மற்றும் நீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். சீரான நேர இடைவெளியில் தாகத்தை கவனித்து தேவையான நீர் அருந்தினாலே போதும். எந்த வேலை செய்தபோதும் நாள் முழுவதும் தாகத்தை கவனித்து தேவையான தண்ணீர் குடிக்கவும், உடலை நீரோட்டத்துடன் வைத்திருக்கவும்.

3. சிறு அளவு உணவை அடிக்கடி உண்க

மூன்று வேளைகளில் பெரிய உணவாக வயிறு நிறைய உண்ணாமல் அதற்கு பதிலாக தினம் 5-6 வேளைகளாக பசியை அடக்கும் அளவுக்கு மட்டும் உணவுகளைக் குறைத்து பிரித்து உண்டால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற கொழுப்பு கரைந்து சக்தியாக மாறும், உடல் எடையும் குறையும்.

4. செயற்கை பானங்களை தவிர்க்கவும்

அதிக சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கொண்ட குளிர்பானங்கள், துரித உணவுப் பொருட்கள் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே அவற்றை முற்றிலும் தவிர்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும். முடிந்தவரை வீட்டில் தயாரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும். பழங்களில் சாறு பிழிந்து குடிக்கவும். இளநீர், மோர், பால் போன்ற இயற்கையான பானங்களை எடுக்கலாம்.

5. தினமும் உடற்பயிற்சி செய்யவும்

தினமும் உண்ணும் உணவினால் உடலில் சேரும் ஆற்றலை பயன்படுத்திவிட வேண்டும். தேவைக்கு போக மீதமாகும் ஆற்றலே கொழுப்பாக உடலில் சேகரித்து வைக்கப்படுகிறது. நாளடைவில் அதனைப் பராமரிப்பு செய்வதே உடலுக்கு பெரும் வேலையாகவும் ஆகி விடுகிறது. நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓட்டம், மிதிவண்டி போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

10 tips for weight loss

10 tips for weight loss

6. தூக்கத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் வளர்சிதை மாற்றத்தை சரியாக சீராக வைத்திருக்க உதவுகிறது. அன்றாட வேலைகளாலும் பிற காரணங்களாலும் உடலுக்கு ஏற்படும் தேய்மானம் தூக்கத்தால் மட்டுமே மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு 7–8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்குங்கள். வேலைப்பளு காரணமாகவோ, அல்லது நண்பர்களுடன் அரட்டை செய்துகொண்டோ, அலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ தொடர்ந்து தூக்கத்தை தவிர்த்தால் உடலின் தேய்மானம் அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்படும். இரவில் நேரமே உறங்கச் சென்று காலை நேரமே எழும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்த முயற்சிக்கவும். இரவு உணவுக்கு பிறகு தேனீர் போன்ற உற்சாக பானங்களை தவிர்க்கவும். தூங்கும் முன் திகிலூட்டும் வகையிலான திரைப்படங்கள், அமானுஷ்ய காட்சிகள், கொலை போர்க் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களை முற்றிலும் தவிர்க்கவும். தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பிலிருந்து மனதிற்கு ஆறுதலும் ஓய்வம் அளிக்கும்படியான கருத்துக்களை மட்டும் மனதிற்கு கொடுக்கவும்.

7. சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்

மாவுப்பொருட்களும் கொழுப்புப்பொருட்களும் மிகவும் குறைவாக இருக்கும்படியும் புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்க்கவும். கீரைகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் வயிறு நிறைந்த உணர்வைத் தரும் எனவே பசி குறையும். இந்த உணவுகளையும் சீரான கால இடைவெளியில் தொடர்ந்து குறைவான அளவில் எடுக்கவும். உணவை சரியான நேரத்தில் உண்ணவும். கொஞ்சமாக பசி ஏற்பட வாய்ப்பளித்து உண்ணவும். இரவு உணவை நேரமே உண்டு அது செரிமானமான பிறகு உறங்குவது நலம்.

10 tips for weight loss

8. உணவுகளை மெதுவாக நன்றாக மெல்லவும்

உணவை மெதுவாக மெல்லுவது உடலுக்கு பசிஅடங்கி நிறைவான உணர்வு ஏற்படுவதை உணர உதவுகிறது, இதனால் அதிகம் உண்பதை தவிர்க்கலாம். இதற்காகத்தான் நன்கு மெல்லும்படியான நார் கொண்ட கீரை வகைகள் காய்கறிகள் போன்றவற்றை சேர்க்கும் படி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. காய்கறிகளில் சுரைக்காய் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ் முருங்கை கீரை போன்றவை தினமும் இருப்பது நலம்.

9. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்

மன அழுத்தம் ஒருவகையில் உணவுக்கு அடிமையாக்கும், இதற்கு உணர்ச்சிவசப்பட்டு உண்ணுதல்(emotional eating) என்று பெயர். மனவளக்கலை, தியானம், யோகா போன்றவற்றின் மூலம் அதை கட்டுப்படுத்தலாம்.

10 tips for weight loss

10. திட்டமிட்ட உணவு முறை அமைக்கவும்

ஒவ்வொரு வாரமும் உணவுத் திட்டம் தயாரித்து அதன்படி பின்பற்றுங்கள். இது இடையிடையே தேவையற்ற எதையும் உண்ணுவதை தவிர்த்து உணவில் கட்டுப்பாட்டை உருவாக்கும்.

சில நாட்கள் ஆர்வமுடன் பின்பற்றி விட்டு பிறகு மனம் மாறி விடாமல் தொடர்ந்து சில மாதங்கள் உடலைசீராக இதற்கு பழக்கப்படுத்தவும். காலப்போக்கில் பலன் தெரியத் துவங்கும். ஐயம் இருப்பின் தங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று தங்கள் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப தனியான திட்டம் ஒன்றை பின்பற்றலாம். மற்ற நோய்கள் இருப்பவர்கள் அதற்காக மருந்து உண்பவர்கள் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற்றே இவற்றை பின்பற்றவும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

10 tips for weight loss

உடல் பருமன் குறித்தான இந்திய அரசின் செய்தி வெளியீடு

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்